Tuesday, July 31, 2007

இலக்கணமா?இலக்கியமா?

இலக்கியத்தில் சமுதாயச் சாடல் கூடாதா?
ஏன் கூடாது?

வெறும் அழகியல் மட்டுமா கவிதை?இல்லை இலக்கணம் கவிதையா?

இதன் சூட்சமம் என்ன?

ஒரு சிறு முயற்சி...

துறக்கின்றோம்
ஆடையினை
வாங்குவதற்காக>>>>>>>>>நன்னடை

கழட்டுகிறோம்
ஆடையினை
வாங்க>>>>>>>>>>>>>>>>சாதாரணம்

ஆடையினை
வாங்குவதற்காக
அம்மனமாகின்றோம்.>>>>>இதில் கொஞ்சம் வக்கிரம் எட்டி பார்த்து விடுகிறது.

இவற்றையே இன்னும் எழுதலாம்..........

இதையே இலக்கிய நடையில் பார்ப்போம்.

மலர்களின் (அல்லது பூக்கள்)இதழ்கள்
உதிர்வதன்ன(உதிர்வது போல்)
உதிர்க்கின்றோம்
ஆடைகளை
புதிதாக
வாங்குவதற்கு...

இதில் வாடிய மலரின் நிலை ஒத்தது எனற அர்த்தமும் வரும் அப் பெண்களின் வாடிய நிலை..
வாடிய மலர்கள் மதிப்பிழ்ந்தவை ஆகிவிடுகின்றன.
அது போல் இப்பெண்களின் நிலையும் சமூகத்தில்.


இதனையே சீர்,தளை, எதுகை,மோனை என்பதையும் சேர்த்து எழுதினால் இலக்கண நடையாகி விடுகிறது.

பாருங்கள் இலக்கிய நடையில் அர்த்தம் சுருங்கச் சொல்லி,விரிவாக கிடைத்து விடுகிறது.

ஆனால் வெறும் இலக்கணம் மட்டுமே இருந்தால் கவிதையா?இல்லை என்பதே
பதில்..

நாமனைவரும் அறிந்த ஒரு சுகமான சுவையான பாசுரம் ஒன்று...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

இலக்கிய நயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு...

வெறும் மார்கழியா...இல்லை இல்லை.... மதி நிறைந்த நன் நாள்............

வெறும் சிறுமிகளா....இல்லை இல்லை
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கண்ணன் யார்....அவன் அப்பா அம்மாஅறிமுகம் சாதாரணமாக
இருக்கலாமா?
அது எப்படி முடியும்?

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

இவ்வளவும் சொல்லியாயிற்று...கண்ணனைச் சொல்லாமலா?

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

"முகத்தை திங்களுக்கு உவமை கூறுவது மரபு. ஆனால் ஆண்டாள் இங்கு கண்ணனது திருமுகத்திற்குக் கதிர், மதியம் ஆகிய இரண்டையும் இணைத்து அதற்கு உவமை கூறுகிறாள். புறநிலையோடு, உள்ளுறை பொருளும் தந்து சிறக்கின்றன என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கதிர்மதியம் போல்முகத்தான் என்று கூறும்போது, கண்ணனின் முகத்தில் தோன்றும் ஒளிக்குக் கதிரவனையும் குளிர்ச்சிக்குத் திங்களையும் உவமையாகக் கூறுகிறாளா, அல்லது கண்ணனின் கண்களை கதிருக்கும், முகத்தை மதிக்கும் உவமையாகக் கூறுகிறாளா அல்லது கண்ணனின் முகம் அடியார்களுக்கு மதியை போன்று குளிர்ச்சி பொருந்தியதாகவும், பகைவர்களுக்கு அவன் கதிரவனைப் போன்று வெப்பமுடையவனாகவும் இருக்கிறான் என்று கூறுகிறாள்.


ஆண்டாளின் சொல் திறன்,கவிநயம் எவ்வாறு வெளிபடுகிறது பாருங்கள்.

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

யார் புகழ ....பாரோர் என்று முடிக்கின்றாள்....

ஆண்டாள்.....

வைணவம் மட்டுமா?

சைவம் மட்டும் இளைத்ததா என்ன?

சீர்மிகு சீர்காழி ஆளுடையப்பிள்ளையின் கூற்றினைப் பார்ப்போம்.

ஞானசம்பந்தன் கூறியதைப் பார்போம் என்பது சாதாரண வசன நடை....

யார் வந்தார்கள்?யார் பால் கொடுத்தார்கள்?எப்படி இருந்தார்கள்?
எங்கு வசிப்பவர்?வெறுதே சிவபெருமான் என்றால் அழகோ??

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.



யார் அவன் காதில் கம்மல் போட்டவன்....காளை மீதேறி வநதவன்
சந்திரனைச் சூடியவன்
எப்படிப்பட்ட சந்திரன் ----தூவெண்....

என்னுடைய உள்ளம் கவர்ந்தவன் எப்படி கவர்ந்தான் சுடுகாட்டுச் சாமபலைப் பூசி...

ஏடுடையமல ரால் பணிந் தேத்த அருள்செய்தவன் எங்கிருப்பவன்

பிரமபுரம் மேவியவன் எப்படிபட்ட பிரமபுரம் பீடுடைய..........

அருளியவர் ஞான சம்பந்தர்...

பெரியபுராணம் 12ம் திருமுறையாகும்.
அப்பூதியடிகள் பற்றி அறிந்தே.

அதிலொரு காட்சி..
ஆறந்தணியுங் சடைமுடியார் அடியார்க்க்கு நீர்வைத்த
ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தரில் நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்
கூறும் என் எதிர்மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.



யாருடைய அடியார்கள் --ஆறந்தணியுங் சடைமுடியார் அடியார்க்க்கு

என்ன வைத்தார்--நீர்வைத்த
ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தர்

போர்டில் என்ன எழுதியிருந்தது---வேறொருபேர் முன்னெழுத
அதில் என்ன பிரச்னை---நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்
எப்படி கேட்டார்-----கூறும் என் எதிர்மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.
எப்படிப்பட்ட மொழியுடையவர்----கோதில் மொழி(குற்றமற்ற மொழி)

வாசிக்க வாசிக்க களிப்பேருவகை அடையும் மனம்....

அப்ப இந்த மாதிரி பாக்களில் மட்டுமா இலக்கியம் உண்டு......
(இவற்றில் இலக்கணமும் உண்டு..இலக்கியம்,இலக்கணம் 2 ம் சேர்ந்த நடை)

ஏனில்லை திரைப்பட பாடல்களிலும் உண்டு...

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

வெறும் சாரலில்லை--சஹானா என்ற புல்வெளிச் சாரல் தூவுதோ


சஹாரா பூக்கள் பூத்ததோ காதல் பூ பூக்கும் முன் பாலைவனமா?

இரு துருவத்தையும் காதலில் மட்டும் தான் பார்க்க முடியும் போலும்.


தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிட

தலைவியின் மெல்லியதான தாபம் அழகான வார்த்தைகளில் வெளிபடுகிறது.

மீசையை விதவிதமாக கையாளப்பட்டு பார்த்திருக்கின்றோம்.
சாவியாக உருவகப்படுத்திருக்கின்றார்....கவிஞர்...


அதற்கு பதிலாக

தலைவனின் மனம் இவ்வாறு விரிகின்றது....எவ்வளவு தூரம்...

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா...

இதையே தலைவியின் தாபத்திற்கு தலைவனின் பதிலாகவும் எடுத்து கொள்ளலாம்..

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே---தலைவியும் பூவே...பூக்களுடன் பூ தலைவி.....

சங்க இலக்கிய அகப்பாடல்கள் இத்தகையதே.....

சரி.நான் எழுதியவற்றிலிருந்து ஒன்றை புரிந்து கொண்டிருப்பீர்கள்.....என நம்புகிறேன்.

சொற்களின் அணிவகுப்பு கவிதையாகா.அதற்கு மேலும் சொல்லுக்கு,கவிக்கு அணி சேர்க்க வேறு ஏதோ ஒன்று தேவை.


சரி.நான் இப்பொழுது சாம்பார் வைக்கப் போகிறேன்...நீங்களும் வாருங்களேன்.சாமபார் வைக்க இல்லை.வேடிக்கை பார்க்க.

சாம்பார் வைக்க முதல் தேவை பருப்பு.பிற புளி,காய்கறிகள்,காரத்திற்கு தேவையான பொடிவகைகள்,உப்பு...இன்னும் தேவையானவை.அவரவர் ருசிக்கேற்ப.

இதில் சாம்பார் என்ற பெயரினை பெற்று கொடுப்பது.
சாம்பாரில் சேர்க்கும் சாம்பார் பொடி என்னும் மசாலா பொடி..
இதுவும் அவரவர் ரசனை,ருசிக்கேற்ப பொருள்கள் கூடும் குறையும்.
ஆனால் முக்கியமாக சேர்ப்பது தனியா என்ப்படும் கொத்துமல்லி விதையும் சீரகமும்.இவை 2ம் இல்லை என்றால் அது சாமபார் பொடி இல்லை.(சிலர் இப்பொடியினைக் கூட புளிக்குழம்புக்கும் பயன் படுத்துவர்.)

இதில் பல்வேறு வகையான சாம்பாரினை சமைக்கின்றோம்.
பலாக் கொட்டைசாம்பார்,அரைத்து விட்ட சாம்பார்,முள்ளங்கி சாம்பார்,
என்பன போன்ற பலவகை.குப்பை சாம்பார் கூட உண்டு.(எல்லா அதிகபட்சக் காய்கறிகளையும் குறந்தபட்சமாக போட்டு,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்துமல்லி போட்டு சாமபார் வைத்தால்
அது பெயர் குப்பை சாம்பார்)அசைவ பிரியர்கள் எலும்பு சாம்பார் வைத்து சுவைப்பர்.

இதே பருப்புடன்,காய்கறி போட்டு,பெருஞ்சீரகம்,கசகசா,கிராம்பு,லவஙகம்,பட்டை,ஏலக்காய்,
ஜாதிக்காய், தனியா, சீரகம் என மசால் பொடி தயார் செய்தால் அது சாம்பார் ஆகுமா?அதற்கு வேறு பெயர் தான் சூட்ட வேண்டும்.

அவ்வாறே கவிதையும் ஆகுக.கவிதை என்னும் வரையறுத்தலுக்குள் வரவில்லை எனில் அதன் பெயர் வேறு....


சரி அணியுடன் தான் எழுத வேண்டுமா?இல்லை என்றால் அது கவிதை ஆகாதா?ஏன் ஆகாது .........ஆகும்..அதையும் பார்ப்போம்...

சரி அணியுடன் தான் எழுத வேண்டுமா?இல்லை என்றால் அது கவிதை ஆகாதா?ஏன் ஆகாது .........ஆகும்..அதையும் பார்ப்போம்...

சங்க இலக்கியத்தில் இலக்கண வரம்பு என்று ஐந்திணைகளையும்
பார்த்திருப்போம்..

குறிஞ்சித்திணை

மருதத் திணை

முல்லைத் திணை

நெய்தற்திணை

பாலைத் திணை



இந்த திணைகளில் அகமும் புறமும் எவ்வாறு பாடப்பட வேண்டுமென்ற
நெறிமுறை இருக்கும்.
முதற் பொருள்(நிலமும்,பொழுதும்)கருப்பொருள்,உரிப்பொருள் ஆகியவனவே திணையை வகைப்படுத்த உதவியது.
அதாவது வரையறுக்கப்பட்டது.

இவ்வரையரையில் உள்ள எல்லாவற்றையும் கொண்டுதான் பாட வேண்டுமா?

இல்லை இல்லை என்கிறது குறந்தொகை.......

நாமனைவரும் அறிந்த குறுந்தொகை பாடலொன்று....

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.


குறுந்தொகை 3 அடி சிறுமையும் 8 அடி பெருமையும் கொண்டது.

பல பாடல்களுக்கு பாடப்பட்டோர் பெயர் தெரியவில்லையாதால்
அவர்கள் பாடிய பாடல்களில் வரும் நயமான தொடர்கள்,உவமைகளைக்
கொண்டு பெயரிட்டனர்.
மீனெறி தூண்டிலார்,
அணிலொடு முன்றிலார்,
விட்ட குதிரையார்,
செம்புலப் பெயல் நீரார்,
குப்பைக் கோழியார்................

நாமிருவரும் யார் என்று தெரியாமலே செம்மண்ணில் பிரிக்க இயலா
வண்ணம் கலந்த நீர் போல் கலந்து விட்டோம் என்கிறான் த்லைவன்.
குறுகிய அடியினைக் கொண்டு இருப்பதால் இதில் முதற் பொருளும்,கருப் பொருளும் வராமல் உணர்ச்சி மிக்கு ஒலிக்கின்றது.

செம் புலப் பெயல் நீர் போல் என்ற நயமான கற்பனை....
மிக உயர்ந்த இலக்கியத் தரத்தினைப் பெற்று கொடுத்து விடுகிறது.
அதன் உரிப்பொருளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றது.....

எட்டுத்தொகையில் ஐங்குறுநூற்றின் தன்மையும் இத்தகையதே,,
3 அடிச் சிறுமையும்,6 அடிப் பெருமையும் கொண்டுது.
பாடல் சிறுத்தாலும் சொற்சுவை,பொருட் சுவையும் நிரம்பியவை.

குறிஞ்சிக்கு என போற்றப்பட்டவர் கபிலர்.

அவர் பாடல் திறன்.....

அன்னாய் வாழி வேண்டன்னை நம் படப்பை

தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண்டெஞ்சிய கலிழி நீரே

தோழி வினவுகிறாள் தலைவிடம் தலைவரின் மலை நாட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடையாதாமே..
தலவி"ஆம் அவர் நாட்டில் சிறு பள்ளத்தில் தான் கொஞ்சம் நீர் இருக்கும்.
அதுவும் மானுண்டு கலங்கியே இருக்கும்.அந்நீர் தாயின் வீட்டில் தேன் கலந்த பாலைக் குடிப்பதை விட இனிமையானது என்கிறாள்.

இதுவும் உரிப்பொருள் கொண்டு பாடப்பட்டதாகும்.

ஆக இலக்கணம் இருப்பினும் வரையறுத்தல்கள் இருப்பினும் 3 பொருட்களில் ஒன்றினை மட்டுமே கொண்டு பாடப்பட்ட பாடல்கள்
இலக்கண,இலக்கியத் தரமே என்று கொள்ளலாம்...


இப்பொழுது புதுக் கவிதை அதன் ஆரம்பம்...பிறவற்றை பார்ப்போம்...

ஆங்கிலக்கவிஞர்கள் என்றால் இங்கிலாந்து கவிஞர்கள் தான்.
பழங்கவிஞர்கள்,பழம் இலக்கியம் என்றால் நினைவிற்கு வருவது இங்கிலாந்து எழுத்தாளர்கள் தான்...

அமெரிக்க கவிஞர் Walt Whitman கவியுலகில் பெரும் புரட்சியினை படைத்தார்.1855 ல் Leaves of Grass என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு புதுக் கவிதைக்கு வித்திட்டார்.
இதோ அவரின் கவிதா வரிகள:

WHOEVER you are, I fear you are walking the walks of dreams,
I fear these supposed realities are to melt from under your feet and hands;
Even now, your features, joys, speech, house, trade, manners, troubles, follies, costume,
crimes, dissipate away from you,
Your true Soul and Body appear before me,
They stand forth out of affairs—out of commerce, shops, law, science, work, forms,
clothes, the house, medicine, print, buying, selling, eating, drinking, suffering, dying.

Whoever you are, now I place my hand upon you, that you be my poem;
I whisper with my lips close to your ear,
I have loved many women and men, but I love none better than you.

O I have been dilatory and dumb;
I should have made my way straight to you long ago;
I should have blabb’d nothing but you, I should have chanted nothing but you.

I will leave all, and come and make the hymns of you;
None have understood you, but I understand you;
None have done justice to you—you have not done justice to yourself;
None but have found you imperfect—I only find no imperfection in you;
None but would subordinate you—I only am he who will never consent to subordinate
you;
I only am he who places over you no master, owner, better, God, beyond what waits
intrinsically
in yourself.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< >
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற் புதிது சோதிமிக்க
நவ கவிதை


யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்படாமல் உணர்வுக்கு முழு உரிமை வழங்கி
எண்ணத்தின் வேகமாய்ய் வெளிவந்த இந்த வடிவம் "கட்டிலடங்காக் க்விதை"இலகு கவிதை"உரை வீச்சு" மார்டன் பொயட்ரி"ந்யூ பொயடரி"
என்று அழைக்கப்பட்டாலும் புதுக் கவிதை என்ற பெயரே நிலைத்தது.

பாரதி இட்ட விதை புதுக் கவிதை முளைத்தது.....
ந.பிச்ச மூர்த்தி,கு.ப.ரா(ராஜகோபால்)இருவரின் கவிதைகள்
படிக்கின்றவர்களை இழுக்கும் இயல்பினவாக இருந்தது...

1934 ல் பிச்ச மூர்த்தி மணிக்கொடி இதழில் இவ்வாறு எழுதியிருக்கின்றார்.

"இருளில் மடல்கள் குவிந்தன
வானத்து ஜவ்வந்திகள் மின்னின
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும்
காட்சி
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்..."


இதை என் உணர்ச்சிப் பெருக்கில் எழுதினேன் என்று இவர் கூறியது நினைவுக்குரியது..வாழ்வின் தத்துவ வரிகள் இவை...
மரணத்தை பற்றிய மயக்க நிலைக்கு அழகியலாக பெண்களின் பேச்சும்,சிரிப்பும்,குழந்தைகளின் கும்மாளமும்...உணர்ந்து படிக்க படிக்கச்
சுவையூறும் ஊற்று..இது..

புதுக் கவிதையை கேலிசெய்தும் ஆதரித்தும் விவாதம் சூடுபறக்க தொடங்கியது.
க.நா.சுபரமணியன் சூறாவளி என்ற வார இதழினை தொடங்கி அதில் மயன் என்ற பெயரில் புதுக் க்விதை ஒன்றை வெளியிட்டார்.அதை கேலி செய்து சுந்தா எழுத,அ,சீனிவாசன் பதில் எழுத விவாதம் தொடர்ந்தது..

கலா மோகினியில் புதுக் கவிதையை ஆதரித்து வி.தை.இராசகோபலன்

"உணர்ச்சியும் சொல்லும் கூடில்
உண்மையில் கவிதையாமிப்
புணர்ச்சியில் லாததெல்லாம்
புலவர் வாய்ச் சொல்லென்றாலும்
மணமிலா மலர் தானென் போம்
மானிடர் மாண்டு போனால்
பிணமெனவே நாம் சொல்வோம்
பிறர்சொலும் வசவுக்ஞ்சோம்'


என்கிறார்..இப்பத்திரிகையின் ஆசிரியர் சாலிவாகனன் இவரே.

"சாக்கடைச் சோற்றை
யாம் உண்கிறோம்
அங்கு சர்க்கரைப் பொங்கலை
ஜமாய்கிறார்"

என்ற புரட்சி கவிதைகளும் அரங்கேறியன.

தோன்றிய காலகங்களில் தன் வாழ்விற்காகப் போராடிய புதுக் கவிதை
அறுபதுகளில் வளர்ச்சி கண்டது.எழுபதுகளில் தனி இடம் தனக்கென்று பிடித்துக் கொண்டது.
1970 அக்டோபரில் மலர்ந்த "கசடதபற" இதழ் புதுக் கவிதைக்கு பேரதரவு கொடுத்தது.
அதில் குறிப்பிடத்தக்கவர் ஞானக்கூத்தன்.

மு.மேத்தாவின் வரிகள் இதோ:
இலக்கணம் செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகை பல்லாக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இஅவையெதும் இல்லாத
கருத்துகள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக் கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக் கவிதை"


என்கிறார்..

இனி புது கவிதையின் வரையரை பார்ப்போம்...

புதுக்கவிதை எழுதுவதிலுள்ள சிரமம் கவிஞன் கற்பனைக் கற்பூரத்தைப் பற்ற வைக்க வேண்டும், ஆனால் அதற்கு தீக்குச்சியைத் துணைக்கு அழைக்கக்கூடாது. சொற்சிக்கனம் என்பது புதுக்கவிதையில் நீக்க முடியாத அங்கம். கற்பனை என்பது புதுக்கவிதையின் ஆதாரம்.
அவசரகதியில் இயங்கும் மனிதன் புதுக்கவிதையில்
சமுதாயச் சூழலை சாடலாம்.குழந்தையைத் தாலாட்டலாம்.
காதலிக்கலாம்.கல்யாணமும் பண்ணிக் கொள்ளலாம்.
மரணத்தையும் ரசிக்கலாம்.


மரக்கொலையை பற்றி மேத்தா இவ்வாறு எழுதுகிறார்
"இலைச் சிறகுகள் இருந்து மரமாகிய
உங்களால் பறக்க முடியவில்லையே - ஏன்
வேர்களே உங்களுக்கு விலங்காகி விட்டனவா?"

புன்னைகையைப் பற்றியும் கண்ணீரைப் பற்றியும் அப்துல் ரகுமான் பின்வருமாறு கூறுகிறார்
"புன்னகை இதழ்களின் கண்ணீர்
கண்ணீர் கண்களின் புன்னகை"

வைரமுத்து
"எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைதட்டும்
தடையொன்றுமில்லை மழை வந்து கேட்கட்டும்"
என்கிறார்.

இவர்களுக்கு புதுக்கவிதையின் நோக்கம் தெளிவாக புரிந்திருக்கிறது. புதுக்கவிதை கண்டிப்பாக படைப்பாளிகளை வெளிக்கொணர்கிறது. உணர்வுகளும் படைப்புகளாகின்றன.

ஆடிக்கு பின்னே
ஆவணி

தாடிக்கு பின்னே
தாவணி


இது புதுக் கவிதையா இல்லையா
என்ற சர்ச்சை ஓய்ந்து விட்டதா இல்லையா என்று தெரியவில்லை.

ஏன் இருக்க கூடாது..
இந்த 4 வரிகள் 1 சோகக் கதையேவே கண் முன் காட்சியாக
விரிக்கின்றதே..

தாடி,ஒரு பாட்டில்,ஒரு நாய்,ஒரு போர்வையைப் போர்த்திய
தேவதாஸ்...தாடிக்கு பின்னால் உள்ள காதல் தோல்வி..

சொற்களின் சிக்கனத்திற்கு இதை விட உதாரணமுள்ளதா?

இது வரை நாம் இலக்கணம்,இலக்கியம் போன்றவற்றைப் பார்த்தோம்.
இலக்கியச்சுவையின்றி,யாப்பினால் கட்டப்பட்ட பாக்களும் சுவை பெறா.
இலக்கியச்சுவையை வேண்டுமென்று வர்ணனை சொற்களை இட்டு நிரப்பினாலும் சுவை பெறாது.
பின் என்னதான் வேண்டும்?
2 வரி ஆனாலும் சரி அதற்கு மேல் எத்தனை வரியாக இருந்தாலும் சரி,
கருவும், அதனை நோக்கிச் செலுத்தப் பட்ட வார்த்தைகளின் ஆழமும்,அழுத்தமும் வேண்டும்.
கவிதை என்பதால் இலக்கியச் சுவையால் அறியப்படுகின்றது.
இதை அறிந்து கொள்வதே நுண்மான் நுழை புலமாகும்.


No comments: