Saturday, April 27, 2013

முல்லைப் பாட்டு - 2



முல்லைப் பாட்டு முதல் பாகம்

அருங் கடிமூதூர் மருங்கில் போகி

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லோடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்

முதலில் விரிச்சி கேட்டல் என்ன என்பதனைப் பார்ப்போம்.

ஒரு செயல் நன்றாக முடியுமா இல்லையா என்பதை ஐயம்
கொண்டவர்கள், மக்கள் நடமாட்டம் குறைவான இடத்தில்
ஊர்ப்பக்கத்தில் நின்று தெய்வத்தைத் தொழுது அப்பொழுது
அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கவனிப்பர்.அயலார்
நற்சொல் கூறின் தாம் நினைத்து வந்த செயல் நன்மையாக
முடியும் என்றும் அல்லாவிடின் தீதாய் முடியும் என்றும்
கொள்வர்

மன்னர் போருக்குச் செல்லுங்கால் விரிச்சி கேட்டதாக பண்டை
நூலால் அறியலாம்.

கணவனைப் பிரிந்து தலைவி பெருவருத்தம் அடைய, அவள்
பொருட்டாக விரிச்சி கேட்டு வரச் சிற்நத் முதிய பெண்டிர் அரிய
காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் போயினர். யாழின்
ஓசையைப் போன்று ஒலிக்கும் இனமான வண்டுகள் ஆரவாரிக்கும் நெல்லுடன்
நாழியில் கொண்ட நறுமணப் பூக்களை உடைய முல்லையின் அரும்புகளில்
அப்பொழுது மலர்வனவாகிய புதிய மலர்களைத் தூவினர்.தெய்வதைக்
கையால் தொழுதனர்.நற்சொல் கேட்டு நின்றனர்.

அருங்கடி மூதூர்  -  மன்னன் வாழும் தலைநகர் என்பது விளங்க, அரிய
காவலையுடைய மூதூர்
பகைவர் புகுதற்கு அரிய காவல் என்று பொருள் அருங்கடி என்பதற்கு.
மூதூர் - பழமையுடைய ஊர்.

மருங்கு  -  பக்கம் முது பெண்டிர் ஊர்ப்புற்த்துச் சென்றது..

விரிச்சி -  நற்சொல் கேட்டல் ..நன்னிமித்தம் என்பனவும் இதுவே.

யாழிசை இன வண்டு -- யாழின் ஒலி போல் பாடும் தன்மையுடைய
கூட்டமான வண்டு.

நறுவீ  --  நறுமணமுடைய மலர்கள்.

அரும்பு அவிழ் அலரி  -  அரும்பு மலரும் மலர்கள்

தூஉய்  -  தூவி

Wednesday, April 24, 2013

முல்லைப் பாட்டு


முல்லைப் பாட்டு

வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் இனிமையை படித்து இன்புற

ஒரு சிறந்த பாட்டு முல்லைப் பாட்டு..

103 வரிகள் கொண்டது முல்லைப் பாட்டு. சிறிது சிறிதாக் நாம் பிரித்து படித்து

இன்புறலாம்..

சங்க இலக்கியப் பாடல்களில் கள்ளுண்ட குரங்காக மனம் மயங்கி கிடப்பதற்கு

காரணம் பாடல்களின் வரிகள் நம் முன் காட்சியாக விரியும்.

அவ்வாறு நான் கண்ட காட்சிகளை உங்களையும் காண அழைக்கிறேன்.

நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த் கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை


இதில் முல்லைத் திணைக்குரிய முதற் பொருளான நிலம் பொழுது
இரண்டையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

பெரும் பொழுது கார்காலம்
சிறு பொழுது மாலை.

முல்லைத் திணை விளக்கம் 

திருமால், அகன்ற இடம் பொருந்திய உலகததை வளைத்துச் சக்கரமும் சங்கும்
ஆகிய குறிகளாஇ யுடையனவும் திருமகளை அணைத்தனவுமான வலிய
கையை உடையவன். மாவலி மன்னன் வார்த்த நீர் தன் கையில் விழுந்த அளவில் வானில் உயர்ந்து வளர்ந்தவன். அத்திருமாலைப் போல் ஒலிக்கும்
குளிர்ந்த கடலினை நீரைக் குடித்து,வலமாய் எழுந்து மலைகளில் தங்கிப்
பின்பு உலகத்தை வளைத்துக் கொண்டு எழுந்த விரைந்து எழும் செலவையுடைய பெருமழை பெய்த பிரிந்தவர்ககுத் துன்பத்தைத் தரும்
புல்லிய மாலைக் காலம்.

நனந் தலை உலகம் - அகன்ற இடத்தை உடைய உலகம்

வளைஇ - வளைத்து

நேமி - சக்கரம்

வலம்புரிசங்கு - வலப்பக்கச் சுற்றுகளையுடைய சங்கு.

பொறித்த - சக்கு சக்கரம் பொறித்தது போன்ற குறிகளைக் கொண்ட
சிறந்த உடல் இலக்கணம்.

தடக்கை - பெரிய என்னும் பொருளது.

நீர் செல நிமிர்ந்த மாஅல் - மாவலி மன்னனிடம் மூவடி மண் கேட்க,
மாவலி இசைந்து நீர் வார்த்த போது, கையில் விழுந்த் போது,அவன்
பெருவடிவு கொண்டு எழுந்து உயர்ந்து இவ்வுலகத்து ஓரடியில் அளந்தற்காக
பெருவடிவு கொண்டான் ஆதலால் நிமிர்ந்த மால்.

வளைஇ - வளைய என்ற பொருள் கொண்டு,உலகத்தை வளைத்து அளத்தற்காக நிமிர்ந்த திருமால் போல் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாஅல் - மால் திருமால்

பாடு இமிழ் - ஒலி முழங்கும்

பனிக்கடல் - குளிர்ந்த கடல்

பருகி - குடித்து

வலன் ஏர்பு - வலப்பக்கமாக எழுந்து

கோடு கொண்டு - மலைகளை இருப்பிடமாகக் கொண்டு

கொடுஞ்செலவு - விரைந்த செலவு

எழிலி - மேகம்

பெரும்பெயல் - பெரும் மழை

சிறுபுன்மாலை - சிறு பொழுதான பொலிவற்ற மாலைப் போது.

Thursday, March 14, 2013

புறத்திணை ஓர் அறிமுகம்


புறத்திணை ஓர் அறிமுகம்

தலைவனும் தலைவியும் தமக்குள் உய்த்து உணர்வது அகத்திணை
ஆகும்.

அதனை தவிர்த்த அனைத்தும் புகழ்,கொடை,வலி,போர்திறன் என்பன
புறத்திணை ஆகும்.


திணை விளக்கம்;

கரந்தைத் திணை:

பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருதல்

“மலைத்தெழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று”
கரந்தை என்பது “கொட்டைக் கரந்தை” என்னும் பூண்டு வகை.
வஞ்சித் திணை:
பகைவர் நாட்டைக் கொள்ள எண்ணிப் போரிடச் செல்லல்.

“வாடா வஞ்சி தலை மலைந்து
கூடார்மண் கொளல் குறித்தன்று”

இப்போர்ச் செயலுக்குரிய பூ வஞ்சிப் பூ.

காஞ்சித் திணை :

போர் செய்வதற்கு வந்த பகைவர்க்கு எதிர் சென்று ஊன்றுதல்.


”வேஞ்சினை மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடிக் கடிமணை கருதின்று.”

இப்போர்ச் செயலுக்குரிய பூ காஞ்சிப் பூ. காஞ்சி என்பது
ஒரு வகை மரம்.

நொச்சித் திணை :
பகைவரின் மதிலைக் காத்துக் கொள்ளுதல்.

”ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
காப்போர் சூடிய பூப்புக்ழ்ந் தன்று.”

இப்போர்ச் செயலுக்குரிய பூ நொச்சிப் பூ.

உழிஞ்த் திணை:

பகைவரின் மதிலை வளைத்துக் கொள்ளுதல்.
”முடிமிசை யுழியை சூடி ஒன்னார்
கொடி நுடங்கு ஆரெயில் கொளக்கரு தின்று”

இப்போர்ச் செயலுக்குரிய பூ உழிஞைப் பூ.உழிஞை என்பது
ஒரு வகைக் கொடி.

இது நொச்சித் திணையின் மாறான திணை.
“உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே.

தும்பைத் திணை:

பகைவருடன் போர் செய்தல்

”சென்ங்களத்து மறம் கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று”

இப்போர்ச் செயலுக்குரிய பூ தும்பைப் பூ.
தும்பை என்பது ஒரு வகைச் செடி.

வாகைத் திணை :
பகைவரை வெல்லுதல்

இலை புனை வாகை சூடி இகல் மலைந்து
அலைகடல் தானை அரசு அட்டு ஆர்ந்தன்று”

இப்போர்ச் செயலுக்குரிய பூ வாகைப் பூ.வாகை
என்பது பாலை நிலத்துக்குரிய மரம்.

பாடாண் திணை:
ஒருவனது புகழ், கொடை, வலி தண்ணளி முதலியவற்றை 
ஆய்ந்து சொல்லுதல்.

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று.

கைக்கிளை:
ஒருவரிடத்து மட்டும் உண்டாகும் ஒரு தலைக் காமம்.
இது ஆண்பாற் கைக்கிளை,பெண்பாற் கைக்கிளை என
இருவகைப்படும்.

பெருந்திணை:
பொருந்தக் காமம். இஃது ஆண்பாற் கூற்று,இருபாற் பெருந்திணை
என்ற இரண்டு பகுப்புக்களைக் கொண்டது.

Wednesday, January 16, 2013

எந்தையும் பரிசிலும்


அற்றைத் தைத்திங்கள் பொங்கலில்
எந்தையும் உடையேம்..
பொங்கல் பரிசும் உடையேம்..
இற்றைத் தைத்திங்களில்
பொங்கல் பரிசும் இலமே..
எந்தையும் இலமே..

மூலம்: பாரி மகளிரின் கையறுநிலை.....

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.




Thursday, January 10, 2013

எவ்வழி நல்லவர் ஆடவர்

எவ்வழி நல்லவர் ஆடவர்

நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு நாமும் ஏதாவது எழுதவில்லை என்றால் நாளைய வரலாறு நம்மை தள்ளி வைத்துவிடும்.


நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் ஆனால் 
பெண்கள்  இப்படி இருக்க வேண்டும்,அப்படி இருக்க வேண்டும் என்று அனேகமாக அனைவரும் கருத்து தெரிவித்துவிட்டார்கள்.

ஔவையாரின் காலத்திலும் ஆண்கள் இப்படி தான் இருந்திருப்பார்கள் போலும்.அவர் மட்டுமே  ஆண்களுக்கு அறிவுரையை நாசூக்காக,நாகரிகமாக    கூறுகிறார்.  


நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.


என்று ஔவையார் புறநானுற்றில் கூறுகிறார்.
எந்நாளுக்கும் பொருத்தமான உரையென விளங்குகிறது.

இதில் ஆடவர் என்பதை உரையாசிரியர்கள் நன்மக்கள் என்று ஏற்றி 
குறிப்பிடுகின்றனர்.

நாடோ,காடோ எதுவாக இருந்தாலும் ஆடவர்கள் நல்லவர்களாக இருந்தால் அந்நிலம் நல்ல நிலமாக இருக்கும்.

நிலமே! நீ  ஒன்றில் நாடே ஆகுக.அதுவன்றி ஒன்றில் காடே ஆகுக.ஒன்றில் பள்ளமே ஆகுக.அதுவன்றி ஒன்றில் மேடே ஆகுக.எவ்விடத்தில் ஆண்மக்கள் 
நல்லவரோ அவ்விடத்தில் நீயும் நல்லதாக விளங்குகிறாய்.நீ வாழ்க..

(புறநானுறு  உரை புலவர் அ.மாணிக்கம்)

ஆனால் நாங்கள் எல்லாம் யாரு ...இதையெல்லாமா கேட்போம் ஹீ ஹீ...




Sunday, September 9, 2007

வாழ்வியலும் திணையும்-சென்னை

ஐவகை திணையின் நிலத்தினைப் பற்றி அறிந்தோம்.
ஐந்திணையும் ஒருங்கே அமைந்தது நம் சிங்கார(?)சென்னை.

குறிஞ்சி திணை-பரங்கி மலை என்றழக்கப்படும் மவுண்ட் செயின்ட் தாமஸ் கிண்டியின் அருகில் சிறு சிறு குன்றுகள் உள்ளது. இங்குள்ள கிறித்துவ தேவாலயம் புகழ் பெற்றது.ஆனால் குறிஞ்சி திணைவாசிகளெல்லாம் இங்கில்லை.

முல்லை திணை-தெற்காசியாவிலேயே பெரியதான,இயற்கையாகவே அமைந்த வண்டலூர் தேசிய விலங்கியல் பூங்கா சற்று மலைபாங்கானதும்,அடர்ந்த வனமாகும். இப்பொழுது பறவைகள் சரணாலயமும் உருவாகியிருக்கிறது.இத்திணை மக்களின் தொழிலை இப்பகுதி மக்கள் செய்து வருகிறார்கள்.அண்ணா பல்கலை கழகம்,ராஜ் பவன்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகள் மரங்களடர்ந்தாகும்.

மருத திணை-சென்னை நகரினை ஆறுகளும்,ஏரிகளும்,கால்வாயும்,
ஒரு காலத்தில் வளப்படுத்தின.ஆதாரம் போயஸ் கார்டன்,கற்பகம் தோட்டம்,பார்டர் தோட்டம்,அம்மணி அம்மன் தோட்டம் என்று தோட்டமும் தோப்புகளும் ஏராளம்.இப்பொழுது சென்னையைச் சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் தொழிலும்,பண்ணைகளும்
உண்டு.காய்கறியும்,கீரையும் முக்கிய பயிர் வகைகள்.முந்திரி மற்றும் பழங்கள் சாகுபடியும் உண்டு.

நெய்தல் திணை-இதை பற்றி அதிகம் கூற வேண்டாம்.உலகிலேயே 2வது பெரிய அழகிய மெரினா என்னும் கடற்கரையை தன்னகத்தேக் கொண்டது.மீன் பிடித் தொழில் சிறந்து விளங்குகிறது இங்கு.எண்ணூர்,இராயபுரம்,காசிமேடு,இராமாபுரம் போன்ற மீன் பிடி தலங்களும், பெரிய துறைமுகமும் உள்ளது.

பாலைத் திணை-புழுதிமண் பறக்க,வறண்ட பகுதிகள் சென்னையைச் சுற்றியுள்ளது.கோடைகாலத்தில் அனைத்து பகுதியும் பாலைதான்.இத்திணையின் தொழிலும்(வழிப்பறிக்கொள்ளை,ஊர் புகுந்து சூறையாடல்)இங்கு அமோகம் தான்.

பாலைத் திணை

பாலை என்பது வேனிற் காலத்தில் குறிஞ்சி,முல்லை வறண்ட திரிபே பாலை எனப்படும்.(உடன்குடி அருகில் 12 மைல் சுற்றளவிற்கு உள்ள தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம்.அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது.)

பெரும்பொழுது-இளவேனிற்காலம்(சித்திரை,வைகாசி)
முதுவேனிற்காலம்(ஆனி,ஆடி)
பின்பனிக் காலம்(மாசி,பங்குனி)
சிறுபொழுது-நண்பகல்(பகல்10மணியிலிருந்து 2 மணிவரை)

கருப்பொருள்கள்;
தெய்வம்-கொற்றவை
உயர்ந்தோர்-விடலை,காளை,மீளி,கன்னி,எயிற்றி
தாழ்ந்தோர்-எயினர்,எயிற்றியர்,மறவர்,மறத்தியர்
பறவை-புறா,பருந்து,கழுகு,எருமை
விலங்கு-செந்நாய்,
ஊர்-குறும்பு
நீர்-வற்றின சுனை,வற்றின கிணறு
பூ-குரா மலர்,மரா மலர்,பாதிரி மலர்
மரம்-உழிசை,பாலை,ஓமை,இருப்பை
உணவு-வழிப்பறி செய்தனவும்,ஊர் புகுந்து கவர்ந்தனவும்
பறை-பூசல் பறை,ஊரெறி பறை,நிறை கோட்பறை
யாழ்-பாலை யாழ்
பண்-பஞ்சுரம்
தொழில்-நிரைகவர்தல்,வழிப்பறி செய்தல்,ஊர் புகுந்து சூரையாடுதல்.[/LEFT]

உரிப்பொருள்;பிரிதலும்,பிரிதல் நிமித்தமும.

பொருள் வினைவயின் தலைவியைப் பிரிந்த தலைவனின் நிலையை தேய்புரிப் பழங்கயிற்றினார் நற்றிணையில் பாவால் படம் பிடிக்கிறார்.

புறம் தாழ்வு இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈர்இதழ்ப் பொழிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோன்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ்
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏத்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கோல்என் வருந்திய உடம்பே.

தலைவியின் நினைப்பால் துயருற்று தலைவனின் நெஞ்சம் தவிக்கிறது.அதே நேரத்தில் பொருள் தேட வந்த வினை முடியாமல் திரும்ப கடமை உணர்வு தடுக்கிறது.காதல் நெஞ்சத்தையும் கடமை நெஞ்சத்தையும் இரு வலிய யானைக்கு ஒப்பீடுகிறார் புலவர்.இரு யானையும் பற்றி இழுக்கும் தேய்ந்த பழங்கயிறு போல என் உடல் வருந்துகிறது என்று காதலா கடமையா என்று அருமையான உவமையோடு உரைக்கிறார்.