Saturday, April 27, 2013

முல்லைப் பாட்டு - 2



முல்லைப் பாட்டு முதல் பாகம்

அருங் கடிமூதூர் மருங்கில் போகி

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லோடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்

முதலில் விரிச்சி கேட்டல் என்ன என்பதனைப் பார்ப்போம்.

ஒரு செயல் நன்றாக முடியுமா இல்லையா என்பதை ஐயம்
கொண்டவர்கள், மக்கள் நடமாட்டம் குறைவான இடத்தில்
ஊர்ப்பக்கத்தில் நின்று தெய்வத்தைத் தொழுது அப்பொழுது
அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கவனிப்பர்.அயலார்
நற்சொல் கூறின் தாம் நினைத்து வந்த செயல் நன்மையாக
முடியும் என்றும் அல்லாவிடின் தீதாய் முடியும் என்றும்
கொள்வர்

மன்னர் போருக்குச் செல்லுங்கால் விரிச்சி கேட்டதாக பண்டை
நூலால் அறியலாம்.

கணவனைப் பிரிந்து தலைவி பெருவருத்தம் அடைய, அவள்
பொருட்டாக விரிச்சி கேட்டு வரச் சிற்நத் முதிய பெண்டிர் அரிய
காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் போயினர். யாழின்
ஓசையைப் போன்று ஒலிக்கும் இனமான வண்டுகள் ஆரவாரிக்கும் நெல்லுடன்
நாழியில் கொண்ட நறுமணப் பூக்களை உடைய முல்லையின் அரும்புகளில்
அப்பொழுது மலர்வனவாகிய புதிய மலர்களைத் தூவினர்.தெய்வதைக்
கையால் தொழுதனர்.நற்சொல் கேட்டு நின்றனர்.

அருங்கடி மூதூர்  -  மன்னன் வாழும் தலைநகர் என்பது விளங்க, அரிய
காவலையுடைய மூதூர்
பகைவர் புகுதற்கு அரிய காவல் என்று பொருள் அருங்கடி என்பதற்கு.
மூதூர் - பழமையுடைய ஊர்.

மருங்கு  -  பக்கம் முது பெண்டிர் ஊர்ப்புற்த்துச் சென்றது..

விரிச்சி -  நற்சொல் கேட்டல் ..நன்னிமித்தம் என்பனவும் இதுவே.

யாழிசை இன வண்டு -- யாழின் ஒலி போல் பாடும் தன்மையுடைய
கூட்டமான வண்டு.

நறுவீ  --  நறுமணமுடைய மலர்கள்.

அரும்பு அவிழ் அலரி  -  அரும்பு மலரும் மலர்கள்

தூஉய்  -  தூவி

No comments: