Sunday, September 9, 2007

நெய்தற்திணை

நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்.

பெரும் பொழுது-ஆறு பெரும் பொழுதும்
சிறு பொழுது-எற்பாடு(மதியம் 2மணியிலிருந்து6மணி வரை)
எல்+பாடு எல்-கதிரவன் பாடு-சாயும் நேரம்.(மறையும் நேரம்)

கருப்பொருள்;
தெய்வம்-வருணன்
உயர்ந்தோர்-சேர்ப்பன்,பலப்பன்,பரப்பன்,துறைவன்,பரத்தி,நுளைச்சி
தாழ்ந்தோர்-நுளையர்,நுழைச்சியர்,பரதவர்,அளவர்,அளத்தியர்
பறவை-கடற்காக்கை,அன்றில்
விலங்கு-சுறா,முதலை
ஊர்-பாக்கம்,பட்டினம்
நீர்-மணற்கேணி,உவர்கழி
பூ-நெய்தல்,தாழை,புன்னை,அடம்பு
மரம்-சுண்டல்,புன்னை,ஞாழல்
உணவு-மீன்,மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள்
பறை-மீன் கோட்பறை,நாவாய்ப்பறை
யாழ்-விளரியாழ்
பண்-செவ்வழிப்பண்
தொழில்-மீன் பிடித்தல்,மீன் விற்றல்,உப்பு விளைத்து விற்றல்,மீன் உலர்த்தல்,அதனை உண்ண வரும் பறவைகளை விரட்டல்.

உரிபொருள்-இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

ஞாயிறுஞான்று கதிர்மழுங் கின்றே
எல்லியும்,பூவீகொடியிற் புலம்படைந்தன்றே
வாவலும் வயின்தொறும் பறக்குஞ்சேவலும்
நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்
ஆயாக் காதலோடு அதர்ப்படத் தெளித்தோர்
கூறிய பருவங் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படுசினை யிருந்த
குராஇல் கூகையும் இராஅ இசக்கும்
ஆனா நோயடவருந்தி யின்னுந்
தமியேன் கேட்குவென் கொல்லோ
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே.

என்கிறார் கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார் நற்றிணையில்.
கிடங்கில்- தற்போதைய திண்டிவனம்

தலைவி தோழியை நோக்கி,தோழீ சூரியனும் சாய்ந்து கதிர்கள் மழுங்கின.இதனால் பூவுர்த்த கொடியினைப்போல் இரவு பொழுது தனித்து வருத்தமுற்றது.வௌவால் எங்கும் பறந்து கொண்டிருக்கின்றன.நகைக்குந்தோறும் ஆந்தைச் சேவல் தன் பெட்டையை அழைக்கிறது.
காதலர் வருவதாக கூறிய பருவமும் கழிந்து கொண்டே உள்ளது.பட்டு போன வேம்பின் மீது குராஅல்(கபில நிறம்)கூகை இரவெல்லாம் குழறிக்கொண்டே உள்ளது.பருத்த அடியினையுடைய பணையின் மடலிலிருந்து துணை விளித்துக் கூவும் அன்றிற் பறவையின் குரலை எங்ஙணம் தனிமையளாக கேட்டிருப்பேன் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.

தலைவி,தலைவனோடு கூடியிருந்த காலத்து மாலையும்,இரவும் இனிதாயிருந்தைப்போன்று இப்பொழுது இல்லை என்பதை குறிப்பால் உணர்த்துகிறாள்.
ஆந்தை தன் துணை விரும்பிக் கூப்பிடுதலைப் போல தலைவன் அனபாய் இல்லை என்று வருந்துகிறாள்


No comments: