Monday, December 4, 2006

குடம் உடைந்தால் ஓடென வைப்பரே!!!

இயற்கையெல்லாம் களிகூர்கிறது.மகிழ்ந்து பாடுகிறது.இயற்கையெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அது ஒரு கிராமம்.
ஒரு புறம் தறியில் ஆடை நெய்யும் ஓசை.மறு புறம் ஆடைகளுக்கு சாயம் ஏற்றும் பணியில் மக்கள்,கிராமத்தின் ஓரத்தில் குயவன் ஒருவன் மண்பாண்டங்களை உருவாக்கியபடியுள்ளான்.
தேர்ந்த நடனப் பெண்ணின் கர அசைவுகள் போல,குயவனின் கரங்களும் அபிநயத்துக்
கொண்டுள்ளன.விதவிதமான பாத்திரங்கள்,குடங்களாக,மண் கூஜாசிறு தொட்டிகளாக அழகு தவழ உருவாக்கிக் கொண்டுள்ளன.பச்சை மண்ணில் பக்குவமாக உருவான அந்த பாத்திர வகைகளை பெரிய அடுப்பில் அடுக்கி வைத்துப் பின் அடுப்பினை மூடிவிட்டு,கீழே தீயினை ஏற்றுகிறாள் குயவனின் மனைவி.
மறுநாள் அடுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்து ஒருபுறம்
அடுக்குகிறாள்.கோடைகாலமானதால் மக்கள் குடங்களையும் பானைகளையும் மக்கள் விருப்புற்று வாங்கிச் சென்றனர்.சக்கரத்தில் மண்ணால் பாத்திரங்களை உருவாக்கியபடி இருந்தான் குயவனும்.தன் கைவண்ணம் கண்டு பெருமித உணர்வு அவனுக்கு.அதே சமயம் குயவனின் மகன் குடத்தை எடுக்கையில் தவறி கீழே விழுந்து உடைந்து விடுகிறது.குயத்தி கோபமாக ஒடி வந்து பிள்ளையை அடிக்க முயல்கிறாள்.வேண்டாம் புள்ள! கொழந்தய அடிக்காதே!குடத்தின் உடைஞ்சதில அடுப்புக்கரி போட்டுக்கலாம் என்றான் குயவன்.அவளும் அதை ஒருபுறம் வைத்து விட்டு உள்ளே சென்றாள்.
ஊரின் இன்னொரு புறம்-நாட்டாண்மை,வகிடெத்துத் தலைவாரிவிட்டு,சலவைத் தொழிராளி கொண்டு வந்து வைத்த வேட்டி,சட்டையை அணிந்து கொள்கிறான்.மார்பில் புலிநகம் வைத்த தங்கச் சங்கிலி அசைந்தாடுகிறது.பார்வை உள்ளே திரும்ப,குரல் கொடுக்கிறான்.''ஏய்,அலமேலு!நேற்று உன் தங்கை கொண்டு வந்து கொடுத்தாளே அந்த வாசனைத் தைலத்தை எடுத்து வா''என்றான்.அலமேலு அலமாரியிலிருந்து எடுத்து நீட்ட அவன் பூசிக் கொண்டான்.வாசனை அறை எங்கும் கமழ்ந்தது.''ஏய் புள்ள எப்படி கம்பீரமா இருக்கேன் பார்த்தியா!'' -மனைவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு களத்து மேட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.
பிற்பகலில் -பண்ணையாள் ஓடி வருகிறான்.''ஆத்தே!எஜமான் மார்வலின்னு படுத்தாரும்மா... வாங்க களத்துக்கு''என்று கூவுகிறான்.பதறி அடித்தபடியே மனைவியும் மக்களும் களத்து விரைவுகின்றனர்.உயிர் போன உடம்பின் மீது வீழ்ந்து கதறுகின்றனர் மனைவியும் மக்களும்.சிறிது நேரத்தில்பிணத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.மகன் தீ மூட்டினான்.நாட்டாண்மையின் உடல் வெந்து கொண்டுள்ளது.சித்தர் பெருமான் திருமூலர் இவ்விரு காட்சிகளையும் காண்கிறார்.மண் பாத்திரம் உடைந்தால் ஓடாக பயன்படுத்தும் மனிதர்கள்,அதைவிட உயர்ந்த ஜீவனான மனிதனின் உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலை மனைவி,மக்கள் நேசித்த உடலை நாழிகை பொழுது கூட காத்திராமல்,பிணமென்று பெயர் சூட்டி எரித்து விடுகின்றனர்.திருமூலரின் சிந்தனையில் மந்திரப் பாடலென்று பளிச்சிடுகிறது.
''வளத்தடை முற்றத்தோர் மாநிலம் முற்றம்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந்த தால்இறை போதும் வையாரே''.
-திருமந்திரம் 157 ஆம் பாடல்.
''உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண் கொணர்ந்து தங்கள் வீட்டு முற்றத்தில் பலவிதமான மண்பாத்திரங்கள் உருவாக்குகின்றார்கள்.அப்பாத்திரம் உடையுமானால் ஓடாக பயன்படுமென்று வீட்டின் ஒருபுறத்தில் சேமித்து வைப்பர்.ஆனால் அவற்றைவிடப் பெருமை பொருந்திய உடம்பிலிருந்து உயிர் பிரியுமானால்,மனைவி,மக்கள்,சுற்றத்தார் அவ்வுடலை ஒருபோதும் வீட்டில் வைக்க மாட்டார்கள்.இத்தனை வெறுப்புக்குள்ளாகும் உடலின் தன்மையை உணர்வீர்!உயிர்க்கு உறுதியாம் இறைவனை நாடுங்கள்!என்கிறார் திருமூலர்.
அரிமா.ந.ஜெயகாந்தி

1 comment:

Padmaja said...

எத்தனை எளிமையான உதாரணத்துடன் உண்மை எடுத்தியம்பப்பட்டுள்ளது! மிக்க நன்றி.