''மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி
மரமது வழியே சென்று வளமனைச் சேரும்போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்''.
மரமது மரத்திலேறி--அரசு,அத்தி இவ்விரு மரங்கள்.அரச மரம் அரசனைக் குறிப்பாதாயிற்று.அத்தி என்னும் சொல் யானையையும் குறிக்கும்.எனவே அரசன் யானை மீதமர்ந்து செல்கிறான்.
மரமதைத் தோளில் வைத்து --மரத்தால் செய்யப்பட்ட ஈட்டியைத் தோளில் தரித்துள்ளான்.இனி கீழே வரும் 3 வரிகளிலும் முதற்சீரானது மரமது என்பது அரசனயே குறிப்பதாயிற்று.
மரமது மரத்தைக் கண்டு--இங்கு மரமானது வேங்கை.
மரத்தினால் மரத்தைக் குத்தி--வேல் கம்பால் வேங்கையைக் குத்தி கொன்று விட்டு
மரமது வழியே சென்று வளமனைச் சேரும்போது--அரசன் வெற்றியாளனாக தனது வளமையான அரண்மனைக்குரிய வழியில் செல்லும்போதுமரமது கண்ட மாதர்
மரமுடன் மரமெடுத்தார்--மரம்-ஆல்,மரமெடுத்தார்-அத்தி,மன்னனைக் கண்ட மகளிர் ஆலத்தி எடுத்து வரவேற்றுப் போற்றினர்.
மரங்களைக் கொண்டு மன்னனின் வீரத்தையும் மாந்தர் அவன்மேல் கொண்டுள்ள மதிப்பையும் விளக்குகிறார் சுந்தரகவிராயர்.இவரது காலம் இடம் போன்ற வரலாறுகள் கிடைக்கவில்லை.
அரிமா.ந.ஜெயகாந்தி
1 comment:
அருமையான விளக்கம், ஜெயா.
Post a Comment