Monday, December 4, 2006

மரக்கூட்டம்

அகிலமெல்லாம் தாவரங்களையும்,மரங்களையும் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.அவ்வாறு பராமரித்தால் தான் பருவ மழை பொய்யாது பெய்து நாடு வளமாக இருக்கும் என்பது உலகோர் உணர்ந்த உண்மை.இங்கு தமிழில் மரங்களை மறைமுகமாக வைத்தே ஒரு சுருக்கமான கதை சொல்கிறார் கவிஞர்.இதோ அந்த நான்கு வரி பாடல்

''மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி
மரமது வழியே சென்று வளமனைச் சேரும்போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்''.

மரமது மரத்திலேறி--அரசு,அத்தி இவ்விரு மரங்கள்.அரச மரம் அரசனைக் குறிப்பாதாயிற்று.அத்தி என்னும் சொல் யானையையும் குறிக்கும்.எனவே அரசன் யானை மீதமர்ந்து செல்கிறான்.
மரமதைத் தோளில் வைத்து --மரத்தால் செய்யப்பட்ட ஈட்டியைத் தோளில் தரித்துள்ளான்.இனி கீழே வரும் 3 வரிகளிலும் முதற்சீரானது மரமது என்பது அரசனயே குறிப்பதாயிற்று.
மரமது மரத்தைக் கண்டு--இங்கு மரமானது வேங்கை.
மரத்தினால் மரத்தைக் குத்தி--வேல் கம்பால் வேங்கையைக் குத்தி கொன்று விட்டு
மரமது வழியே சென்று வளமனைச் சேரும்போது--அரசன் வெற்றியாளனாக தனது வளமையான அரண்மனைக்குரிய வழியில் செல்லும்போதுமரமது கண்ட மாதர்
மரமுடன் மரமெடுத்தார்--மரம்-ஆல்,மரமெடுத்தார்-அத்தி,மன்னனைக் கண்ட மகளிர் ஆலத்தி எடுத்து வரவேற்றுப் போற்றினர்.
மரங்களைக் கொண்டு மன்னனின் வீரத்தையும் மாந்தர் அவன்மேல் கொண்டுள்ள மதிப்பையும் விளக்குகிறார் சுந்தரகவிராயர்.இவரது காலம் இடம் போன்ற வரலாறுகள் கிடைக்கவில்லை.

அரிமா.ந.ஜெயகாந்தி

1 comment:

Padmaja said...

அருமையான விளக்கம், ஜெயா.