Tuesday, September 4, 2007

இயற்கை வளம்

"பண்டை இயற்கை வளங்கள் எல்லாம்-பத்துப் பாட்டின் வளத்திற் கண்டறிந்து மண்டலம் எங்கும் புகழும் அருந்தமிழ்-வாசம் நுகர்ந்து மகிழ்வோமே?" என்று கவிமணி அவர்கள் பத்துப்பாட்டை பாராட்டுவார்.

வேளிர் குலத்தில் தோன்றிய நன்னன் வேள்மானின் நாட்டு வளம் மலை படுகடாமில் நன்கு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

பொய்யாக விளையாட்டுப் போர் நிகழ்த்தும் யானைக்கன்றுகளின் இணைந்த கைகள் போன்று கொய்தற்குரிய பருவத்தில் முற்றி தயிரின் சிதறுண்ட துளிகள் போன்று அவரைப்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. தினைக்கதிரைக் கொய்து விட்ட தாளில் அரிவாளைப் போன்று வளைந்த அவரைக்காய்கள் தொங்கின.

பால்கட்டி முற்றி பல கிளைகளாய் காற்று ஊடே செல்லுதலால் நன்றாக விளைந்தன ஐவனநெல் என்ற வகையும் வெண்ணெல் வகையும். வேல் படையின் தொகுதி போன்றிருந்த கரும்புகள் கெட்டது போன்று மிகுதியான காற்று மோதுதலால் ஓசைஉடன் காய்ந்து, அறுத்தலும், குறைதலும் இல்லாமல் உயர்ந்து வளர்ந்து அறுக்கப் பெற்று கரும்பாலைக்குச் சென்றன இனிய சுவையான கரும்பு.

பிறரால் செய்யப்படாத பாவை போன்று அமைந்த இஞ்சிக் கிழங்கு நன்கு வளர்ந்து முற்றி உறைப்புச் சுவையைக் கொண்டன. செழுமையான கொடிகளையுடைய கவலைக் கிழங்குகள் நன்கு மாப்பிடித்து வலிமை வாய்ந்த பெண்யானையின் முழந்தாள் போன்று குழிகள் தோறும் நன்றாக வளர்ந்தன.

காம்பில் உள்ள வேல், யானை முகத்தில் பாய்ந்தது போன்று முறைப்பட மலர்ந்த வாழைப் பூக்கள் அருகிருக்கும் பாறையில் குத்தி நின்றன. அவ்வாறுள்ள வாழைச் சோலை காய்கள் நெருங்கி நன்கு பழுத்துப் பயன்படும் நிலையில் முறையாக அசையும்.

நீண்ட அடியையுடைய ஆசினிப் பலா மரங்களின் பழங்கள், புண் போன்று வெடித்து விதைகள் சிந்தின. வழிச் செல்லும், கூத்தருடைய மத்தளங்கள் தொங்குவது போல பழங்கள் முற்றித் தொங்கின தாழ்ந்த கிளைகளை யுடைய பலா மரங்கள் நிறைந்திருந்தன.

நேரில் கண்டு மகிழ்வது போன்ற உணர்வை தருகிறது அல்லவா இந்த வர்ணனைகள்? இப்போதுள்ள குழந்தைகள் அவரைகாய், வாழை, பலா, நெல் ஆகியவற்றை கடைகளில் தான் பார்த்திருப்பார்கள். அவை விளையும் இடங்களை இப்படி சங்க இலக்கியம் படித்தால் ஓரளவிற்கு தெரிந்து கொள்வார்கள்.
செய்வார்க்ளா?

M.Jeya Bharathi

No comments: